ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Update: 2023-09-30 11:30 GMT

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் நோயாளிகளுக்கு 'ஆஞ்சியோ சிகிச்சை' மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி   தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தின விழா நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதயவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே.கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகக் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆர்.சாந்தி மலர் கலந்து கொண்டு இதய நோய்க்கான மருத்துச் சிகிச்சை பெற்று குணடைந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இதய நோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார். .

சீரான உணவு பழக்கம்:

அப்போது டாக்டர் சாந்திமலர் பேசியதாவது:  உலக இதய தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப் பொருள் "இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறிந்து கொள்" என்பதாகும், இது நம் இதயங்களைப் புரிந்து கொள்வதன் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது. இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, இரத்தப் பரிசோதனைகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்ற முக்கிய அம்சங்களைப் புரிந்து கொள்வது, இதய ஆரோக்கியத்தை மதிப்பிடவும், பராமரிக்கவும் இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றாக இதயநோய் மாறி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும் சீரற்ற உடல் பழக்கம், மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதய நோய்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, போதிய தூக்கம், உப்பு, சர்க்கரையை குறைவாக எடுத்துக்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை கண்டிப்புடன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இத்தகைய பழக்கங்களை மருத்துவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாந்திமலர்.

15 ஆயிரம் பேருக்கு 'ஆஞ்சியோ சிகிச்சை :

கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி பேசியதாவது:  ஸ்டான்லி மருத்துவமனையில் இதய சிகிச்சைக் கான 'கேத் லேப்' தொடங்கப்பட்டு சுமார் 5 ஆ்ண்டுகளில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை மற்றும் 'ஆஞ்சியோ பிளாஸ்ட்' சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இதயநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 115 பேருக்கு பேஜ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இதய வால்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை இதயநோய் பிரிவு இதர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு நவீன கட்டமைப்பு வசதிகள், திறமையான மருத்துவர்கள்தான் காரணம். இதயநோய் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிகமான தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கட்டணம் ஏதுமின்றி முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் உதவியுடன் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் பாலாஜி.

நிகழ்ச்சியில் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர்கள் எஸ்.முருகன், சம்பத்குமார் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News