திருவொற்றியூர் - கோவளம் நேரடி பஸ் வசதி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கிவைத்தார்
திருவொற்றியூரில் இருந்து கோவளம் வரை நேரடி புதிய பஸ் வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.;
திருவெற்றியூர் - கோவளம் இடையே புதிய பஸ் வசதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கவைத்தார்.
வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையார், திருவான்மியூர் ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல பாரிமுனை சென்று அங்கிருந்து பஸ் மூலமாகவோ ரயில் மூலமாகவோ செல்கின்றனர்.மேலும் கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராமத்தில் போக்குவரத்துக்கு இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் திருவெற்றியூர் முதல் கோவளம் வரை உள்ள 100 மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருவெற்றியூர் கோவளம் இடையே புதிய வழித்தடத்தில் (தடம் எண் 109 டி) பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா திருவெற்றியூர் புதிய பஸ் பணிமனையில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
திருவொற்றியூரில் இருந்து புறப்படும் இந்த பேருந்து சுங்கசாவடி, ராயபுரம், பாரிமுனை, தலைமைச்செயலகம், கண்ணகி சிலை, நொச்சிகுப்பம், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், விஜிபி பகுதிகள் வழியாக கோவளத்தில் சென்றடையும் இந்த வழித்தடத்தில் இரு வழிகளிலும் இரண்டு பஸ்கள் தினமும் 4 முறை இயக்கப்படும்.
மேலும் திருவொற்றியூரில் இருந்து கோவளம் செல்ல ரூபாய் 48 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.