ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும்

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து சில்லறை வியாபாரிகளை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2023-02-08 08:45 GMT

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சென்னை திருவொற்றியூரில் நடைபெற்றது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏ. எம். விக்கிரமராஜா

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து சில்லறை வியாபாரிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரமராஜா  தெரிவித்தார்.

வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவொற்றியூரில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ஆதிகுருசாமி தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் ஏ எம் விக்ரம் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்கு பிறகு விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் இயற்கை நெறிமுறைகளுக்கு மாறாக பல்வேறு சலுகைகளை வெளியிட்டு சில்லறை வியாபாரிகளை அடியோடு நசுக்கும் நடவடிக்கைகளில் உலக, இந்திய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. 200 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்வதாக பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.

பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது பொருள்களை கொள்முதலின் அளவிற்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு விலைகளில் விற்பனை செய்கின்றனர். இதில் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. பொதுமக்களின் அங்கமாக இருக்கும் சில்லறை வியாபாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டியிட முடியாது. எனவே இதனை கட்டுப்படுத்தி அனைவருக்கும் ஒரே விலையில் விற்பனை செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே சில்லறை வியாபாரிகளை ஒட்டு மொத்தமாக நசுக்க முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிமம் வழங்குவதில் எளிமையான நடைமுறை:மக்களை தேடி மருத்துவம், இல்லம் தோறும் கல்வி போன்ற திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வரும் அரசு அனைத்து அனைத்து வகை உரிமங்களையும் வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கிட வேண்டும். இதன் மூலம் வீணான அபராதங்கள், தண்ட நடவடிக்கைகளை தவிர்க்க இயலும்.

சமூக ஆர்வலர்கள் போர்வையில் சமூக விரோதிகள்:வடசென்னை பகுதியில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சில வழக்குரைஞர்கள் குழுவாக சேர்ந்து கொண்டு வியாபார நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பெரிய அளவிலான பணத்தையும் இழக்கும் நிலை தொடர்கிறது. எனவே இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெகிழிக்கு மாற்று பொருள் என்ன?பொருள்களை பேக்கிங் செய்வதற்காக நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நெகிழிக்கு மாற்றாக அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களை கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதுவரை நெகிழி பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தீவிர தன்மையை அதிகாரிகள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார் விக்கிரமராஜா.

நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜுலு, சதக்கத்துல்லா, துரைப்பழம், ஏ.வி. எஸ். மாரிமுத்து, சந்திரசேகரன், சகரியா சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News