மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்
மின்தடையைக் கண்டித்து திருவொற்றியூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்;
கனமழை காரணமாக மின்விநியோம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து திருவொற்றியூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம் சென்னையின் பெரும்பாலான பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையைக் கடந்து சென்றுவிட்ட நிலையில் மீண்டும் விநியோகம் தடையின்றி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. திங்கள்கிழமை காலை ஒரு சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் தொடங்கியது.
ஆனால் ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளானது. இந்நிலையில் எண்ணூர், எர்ணாவூர், திருவொற்றியூர் மீனவ குப்பம், மின்வாரிய அலுவலகம், விம்கோ நகர், பெரியார் நகர், வடக்கு மாடவீதி, எல்லையம்மன் கோயில் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து திருவொற்றியூரில் ஒரு சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் தொடங்கியது. ஆனாலும் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாததை யடுத்து சாலை மறியல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.