குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்க சிறப்பு முகாம்

குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்க சிறப்பு முகாம் நடத்த அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது

Update: 2023-11-14 16:15 GMT

பைல் படம்

நவ.13 முதல் வரும் 30-ம் தேதி வரை 16 நாள்களுக்கு குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்க அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முதன்மை அஞ்சல் தலைவர் ஆர்.அமுதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய அஞ்சல் துறை நாட்டின் குடிமக்களிடையே சேமிப்பைத் திரட்டுவதிலும், இடர் இல்லாத வருமானத்தை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு பயன் அளிக்கும் வகையில் செல்வ மகள் சேமிப்புத் திட்டமும், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் தொகையைச் சேமிக்கலாம். இரண்டு திட்டங்களுக்கும் வருமான வரிச் சலுகைகள் உண்டு.

குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி இரண்டு திட்டங்களுக்கான சேமிப்புக் கணக்குகளை தொடங்க சென்னை பொது அஞ்சலகத்தில் நவ.13 முதல் 30-ம் தேதிவரை சுமார் 16 நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற உள்லது. பெற்றோர்கள் இதனைப் பயன்படுத்தி தங்களது குழந்தைகள் பெயரில் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி அவர்களின் வளமான எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என  அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News