இந்திய கடலோர காவல் படையின் 46-வது ஆண்டு தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை அருகே ஒளி வெள்ளத்தில் ரோந்து கப்பல்கள் அணிவகுத்து சென்றன.
கடந்த பிப்.1, 1977-ம் தேதியன்று இந்திய கடற்படையிலிருந்து கடலோர காவல் படை தனியாக தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் இந்த நாளை கடலோரக் காவல் படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு கப்பல்களுடன் புதிதாக தொடங்கப்பட்ட கடலோர காவல் படை தற்போது 158 ரோந்து கப்பல்கள் 78 விமானங்களுடன் வலிமைமிக்க படையாக வளர்ந்துள்ளது. உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படையாக இந்திய கடலோர காவல் படை இயங்கி வருகிறது .
கடலோர காவல் படை தினத்தையொட்டி கிழக்கு பிராந்தியம் சார்பில் சென்னையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப்போட்டி, மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, மீனவர்களுக்கான வாலிபால் போட்டி, துப்புரவு பணிகள், தூய்மை குறித்த விழிப்புணர்வு , சைக்கிள் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஒளி வெள்ளத்தில் அணிவகுத்த கப்பல்கள்:
சென்னை மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை இடையே கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்களான சுஜய் சாகர், அன்னிபெசன்ட், ராணி அபேக்கா ஆகியவை ஒளி வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவகுத்து சென்றன. அப்போது மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் அருகே கடற் பகுதியில் கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கடலோர காவல் படை வீரர்கள் பங்கேற்று கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கத்தை செய்து காண்பித்தனர். புதன் கிழமையும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடலோர காவல் படை தினம் புதன்கிழமை கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர். என் .ரவி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.