சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஆய்வு

சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் சுதன்ஷ் பந்த் வரும் பிப்.1 -ஆம் தேதி முதல் அமைச்சக செயலாளராக பொறுப்பேற்க உள்ளார்;

Update: 2023-01-21 16:30 GMT

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு அதிகாரி சுதன்ஷ் பந்த் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் சுதன்ஷ் பந்த் வரும் பிப்.1 தேதி முதல் அமைச்சக செயலாளராக பொறுப்பேற்க உள்ளார். இதனையடுத்து சென்னைக்கு வருகை தந்த அவர் சனிக்கிழமை சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிரம்மாண்ட தேசியக்கொடி... சென்னை துறைமுகத்திற்கு வந்த சுதன்ஷ் பந்த் தலைமை அலுவலகம் முன்பு ரூ.13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 20 மீட்டர் உயரம் கொண்ட கம்பத்தில் 24 அடி அகலம் 16 அடி உயரம் கொண்ட மிகப் பெரிய தேசியக் கொடியை பறக்க விட்டார். ரூ. 53 கோடியில் அமைக்கப்பட உள்ள வாகன நிறுத்த மையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ. 1.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நாளொன்றுக்கு 90 கிலோ லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்தகரிப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் பயணிகள் முனையம் மற்றும் கப்பல் தளங்களை பார்வையிட்டார். துறைமுகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து துறைமுக தலைவர் சுனில் பாலிவால் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில்... பின்னர் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு வந்த சுதன்ஷ் பந்த் இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை சுகாதார மையம், 300 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், திரவ எரிவாயு முனைய சாலை உள்ளிட்ட ரூ. 21 கோடி மதிப்பீட்டிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் முனையங்கள், துறைமுகத்தின் சார்பில் நிர்வகிக்கப்படும் பல்சரக்கு முனையம், சரக்குகள் கையாளப்படும் விதம் உள்ளிட்டவைகளை பார்வையிட்ட அவர் துறைமுக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஏற்கனவே நடைபெற்ற முடிந்துள்ள திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய துறைமுக தலைவர் சுனில் பாலிவால் நாட்டின் பெருந்துறை முகங்களில் 12-வது துறைமுகமாக தொடங்கப்பட்ட எண்ணூர் காமராஜர் துறைமுகம் தற்போது ஆண்டுக்கு 54 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளும் திறன் கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் 32 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ள நிலையில் நடைபாண்டில் வளர்ச்சி விகிதம் சுமார் 17 சதவீதம் அதிகரித்து நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 45 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் துறைமுகத்தின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News