வெள்ளத்தில் மூழ்கிய எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை
திருவொற்றியூர் மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வு செய்தார்;
எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை புழல் ஏரிக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு மூழ்கியது. இதனால் இச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம், புழல் ஏரிகள் கொள்ளளவு நிரம்பியதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை புழல் ஏரியிலிருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது தவிர கொசஸ்தலை ஆற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்து உபரி நீரும் எண்ணூர் முகத்துவாரம் வழியாகவே கடலுக்குள் சென்று கலக்கிறது.
இதற்கிடையே வடசென்னை பகுதியில் வெளியேற்றப்படும் வெள்ள நீரும் பக்கிங்காம் கால்வாய் வழியாகவே எண்ணூர் முகத்துவாரம் சென்று கடலில் கலக்கிறது. ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டு வரும் அளவுக்கு அதிகமான வெள்ளநீரால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அடங்கிய சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள், சடையன்குப்பம், பர்மா நகர், மணலி புதுநகர், ஆண்டார்குப்பம், கொசப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இடுப்பளவு தண்ணீரில் மூழ்கியது. சி.பி.சி.எல், சென்னை உரத் தொழிற்சாலை உள்ளிட்டவைகளைச் சுற்றிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது.
இதனையடுத்து எண்ணூர், மணலி துறைமுக இணைப்புச் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மாத்தூர், மணலி ஏரிகள் நிரம்பியதையடுத்து மணலியிலிருந்து மாதவரம் பால்பண்ணைக்குச் செல்லும் சாலையில் சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நீரில் மூழ்கிய கார்கில் நகர்:
கனமழை பெய்யும் போதெல்லாம் பாதிக்கப்படும் திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதி இந்த மழையிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை, வீதி, வீடுகள் எது என அடையாளம் தெரியாத அளவுக்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. புயல் கரையைக் கடந்துவிட்டதால் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏரிகளின் உபரி நீர் திறக்கப்பட்டதால்
நிலைமை மோசமாகிவிட்டது. சத்யமூர்த்தி நகர், கலைஞர் நகர், ஜோதிநகர் உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் தரைத்தளத்தில் மழைநீர் புகுந்துவிட்டது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாம்பு மற்றும் விசப்பூச்சிகளின் அபாயமும் அதிகரித்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் முற்றிலுமாகக் கிடைக்கவில்லை. மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் உணவு உள்ளிட்டவைகளும் பெரும்பாலானோருக்குக் கிடைக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
படகுகள் மூலம் மீட்பு:
சென்னை மாநகராட்சி வார்டு எண் 4,6 மற்றும் 7 க்கு உள்பட்ட திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் வீடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் பைபர் படகுகள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவு பொருள்களையும், பால் மற்றும் குடிநீர் உள்ளிட்டவைகளை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர் மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திங்கள்கிழமை பார்வையிட்டார். மேலும் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தாட்கோ மேலாண்மை இயக்குனர் கே.எஸ்.கந்தசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவேந்திரன் உள்ளிட்டோர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.