மதுபோதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தவர் உயிரிழப்பு
சென்னை தண்டையார் பேட்டையில் மதுபோதையில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தவர் உயிரிழந்தார்.;
திருவொற்றியூர் அடுத்த தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் மாநகர பேருந்தில் பயணம் செய்த நபர் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்த பொழுது டயரின் பின்புற சக்கரத்தில் கால்கள் மாட்டி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கும் ஆம்புலன்சிற்க்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் சிக்கிய அந்த ரமேஷ் (வயது 40 )என்பவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் ரமேஷ் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் நேற்று மாலையில் ரெட்கில்சில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் மதுபோதையில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பேருந்து தண்டையார்பேட்டை இளைய முதலி தெரு வழியாக சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தின் முன்புற படிக்கட்டு வழியாக ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தவர் கால் தடுமாறி பேருந்தின் பின்புற டயரில் கால்கள் மாட்டிக் கொண்டதாகவும் இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் இன்று உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநர் நடராஜன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.