வடசென்னை அனல் மின் நிலைய சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்ற மீனவர்கள் எதிர்ப்பு
அனல் மின்நிலைய சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதை எதிர்த்து 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தெரிவித்து போராட்டம்;
எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்கு 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணுார், நெட்டுக்குப்பம், முகத்துவாரக் குப்பம், தாழங் குப்பம், எண்ணுார் குப்பம், காட்டுகுப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம் உள்ளிட்ட எட்டு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரம் வழியாக சென்று மீன்பிடித்து வருகின்றனர். தவிர ஆறும் கடலும் இணையும் பகுதியான முகத்துவாரத்திலும் மீன்பிடித்து வருகின்றனர். நன்னீரும், கடல் நீரும் இணையும் முகத்துவாரப் பகுதியில் தான் மீன்கள், நண்டு, இறால் போன்றவை கடல் வாழ் உயிரினங்கள் இனபெருக்கம் செய்ய ஏதுவான இடமாகும்.
வடசென்னை அனல்மின் நிலையம் அலகு ஒன்றில் குளிரூட்டு வதற்காக பயன்படுத்தப்படும் கடல் நீர் கொசஸ்தலை ஆற்றில் விடப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்படும் சுடுநீரால் சுற்றுச் சூழல் சமநிலை பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கம் பெருமளவு பாதிக்கப்படுகிறது இப்பகுதி மீனவர்கள் நீண்ட நாள்களாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மணல் மூட்டைகளைக் கொண்டு சுடுநீர் வெளியேற்றப்படும் பகுதியில் தடுப்புகளை ஏற்படுத்த முயன்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கூறியதா வது: கொசஸ்தலை ஆறு கடலில் சென்றடையும் எண்ணூர் முகத்துவாரம் ஒரு காலத்தில் மீன்வளம் நிறைந்து சுற்றுச் சூழல் மாசற்ற வகையில் எழில் பொங்கக் காட்சியளித்தது. ஆனால் இப்பகுதியில் படிப்படியாக உருவான கனரக தொழிற்சாலைகள், மின்னுற்பத்தி நிலையங்களால் இப்பகுதி முற்றிலுமாகச் சீரழிந்து போய்விட்டது.
மேலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் சென்னை மாநகரின் கழிவு நீரும் எண்ணூர் முகத்துவாரத்தில் கலப்பதன் மூலம் இப்பகுதியே சாக்கடையாகக் காட்சியளிப் பதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் மீன்வளம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அனல்மின் நிலையத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படும் சுடுநீரை நேரடியாக ஆழமான கடல் பகுதியில் கலக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் வாழ்வாதரத்தை இழந்து வாடும் மீனவர்கள், மீனவ குடும்பங்களைச் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். கொசஸ்தலை ஆறு, முகத்துவாரம் உள்ளிட்டவைகளை முறையாகத் தூர்வாரி சீர்படுத்தவேண்டும். ஆற்றில் சுடுநீர் வெளியேற்றுவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மீனவர்களின் முற்றுகை போராட்டம் குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். மேலும் இது குறித்து மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.