ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2023-03-07 00:30 GMT

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி(பைல் படம்)

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் சுமார் 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

 வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில்  நேற்று முன்தினம் இரவில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை வகித்தார்.இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு 75 பேருக்கு தையல் இயந்திரங்கள், 45 பேருக்கு மீன்பிடி வண்டிகள், சிற்றுண்டி கடை வண்டிகள், காய்கறி வண்டிகள், 200 பேருக்கு இட்லி பாத்திரங்கள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அரிசி மூட்டைகள் என சுமார் 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதாவின் பிறந்தநாள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த கட்சியை ஒன்றாக இணைத்தவர் ஜெயலலிதா. அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் கடந்து ஆட்சியைப் பிடித்தவர் அவர்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள் என்றால் அது மிகையாகாது. இவர்கள் இருவரும் கட்டிக்காத்த அதிமுக-வை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்தவர் அம்மா. பீனிக்ஸ் பறவைபோல எழுந்து வந்து 15 ஆண்டு காலம் ஆட்சியமைத்தார். புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்.

அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சாதாரண கிளை செயலாளர் முதல்வராக முடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் தான். தி.மு.க.வில் அது நடக்காது. . திமுக என்பது வாரிசு அரசியலை முன்னிலைப்படுத்தும் கட்சியாகும். திமுகவின் முக்கிய தலைவர்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு தனது மகனை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்களைக் கடந்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்ட தொகையில் ரூ.2 கோடியில் மட்டும் பேனா சின்னத்தை அமைத்துவிட்டு மீதி தொகையில் மாணவர்களுக்கு எழுதும் பேனாக்களை வழங்கிடலாம் என்பதுதான் அதிமுகவின் கருத்தாகும் என்றார் பழனிசாமி.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக் மற்றும் கோவை சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News