கிழக்கு பிராந்திய கடலோரக்காவல் படை ரோந்து பணியில் புதிய ஹெலிகாப்டர் படைப் பிரிவு
கடலோரப் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் இந்திய கடலோர காவல்படையின் திறன்களுக்கு மேலும் மைல் கல்லாக இப்படை இருக்கும்
இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய ரோந்து பணியில் புதிய இலகுரக ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப் பிரிவை இந்தியக் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்தியக் கடலோரக் காவல் படையில் கிழக்கு பிராந்தியம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், டோர்னியர் விமானங்கள் உள்ளிட்டவைகளுடன் பல்வேறு படைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இப்பிராந்தியத்தின் ரோந்துப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய இலகுரக ஹெலிகாப்டர் (ALH-MK-3) வசதியுடன் கூடிய 840 என்ற புதிய படைப்பிரிவை சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் வி.எஸ். பதானியா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு ராணுவ, சிவில் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர்: ஹெலிகாப்டர் உற்பத்தித் துறையில் தற்சார்பு நிலையில் எட்டும் வகையில் மத்திய அரசின் "ஆத்ம நிர்பார் பாரத்" என்ற திட்டத்தின் அடிப்டையில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிடெட் நிறுவனத்தில் இப்புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிநவீன ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள், ஆற்றல் அதிகம் நிறைந்த இயந்திரங்கள், முழுதும் கண்ணாடியிலான காக்பிட், ரோந்து பணியில் ஈடுபடும்போது பயன்படுத்தப்படும் தேடுதல் விளக்குகள், நவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய கட்டமைப்பு வசதிகள், தானியங்கி அடையாள அமைப்பு, தேடுதல் மற்றும் மீட்பு உபகரணங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சங்களாகும். மேலும் கடல்சார் ரோந்து பணிகளை மேற்கொள்வதற்கும், கப்பல்களுக்கு இடையே ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை இடம் மாற்றும் வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் உள்ளது.
கனரக துப்பாக்கிகள்: ரோந்து பணிகளின்போது எதிர்கொள்ள கனரக இயந்திர துப்பாக்கிகளை இயக்கும் வசதி, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு உள்ளிட்டவை இதில் உள்ளன. இந்தியக் கடலோரக் காவல் படையில் தற்போது இவ்வகையைச் சேர்ந்த 16 ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் கிழக்கு பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 430 மணி நேரம் பறந்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இப்புதிய படைப் பிரிவின் கமாண்டன்ட் அதுல் அகர்வால் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 52 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா பிராந்தியத்தில் உள்ள கடலோரப் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் இந்திய கடலோர காவல்படையின் திறன்களுக்கு மேலும் மைல் கல்லாக 840 என்ற இப்புதிய படைப் பிரிவு உறுதுணையாக இருக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.