எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்க ளுக்கு நிவாரணம்: தேமுதிக கோரிக்கை
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கோரிக்கை
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளை நிவாரணம் அளிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்,
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது சி.பி.சி.எல். நிறுவனத்திலிருந்து வெளியேறிய கழிவு எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் மூலம் எண்ணூர் முகத்துவாரப்பகுதியில் தேங்கியுள்ளது. எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள எண்ணூர் முகத்துவாரப் பகுதியை தேமுதிகபொதுச் செயலாளர் பிரேமலதா விஜயாந்த் சனிக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது: 2016-ம் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் இதே போன்று எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேறியது. ஆனால் தற்போது அதைவிட அதிக அளவில் எண்ணெய்க் கழிவுகள் வெளியேறி இப்பகுதி மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பழவேற்காடு வரை சுமார் ஆயிரத் திற்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் இப்பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மாநில அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானது அல்ல. மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் மத்திய, மாநில மீனவர் நலத்துறை அமைச்சர்கள் நேரில் பார்வையிடவில்லை. எனவே உடனடியாக அமைச்சர்கள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மீனவர் களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்கப்பட வில்லையெனில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நிவாரண உதவிகள் அளிக்கப்பட வில்லையெனில் தேமுதிக போராட்டம் நடத்தும்.
நினைவிடங்களில் அனுமதி மறுப்பு:
நான் தேமுதிக பொதுச் செயலாளராக தேர்வு செய்யபட்டதையடுத்து அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதற்காகச் சென்றபோது சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக கூறி எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி தனது பிறந்தநாளின்போது இதே இடங்களில் மரியாதை செலுத்தினார். நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதில் கூட பாரபட்சம் காட்டப்படுவது கண்டனத்திற்கு உரியது. கனமழையால் சென்னை மாநகர மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை ரூ. 6 ஆயிரத்தை அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும்என்றார் பிரேமலதா.