திருவொற்றியூரில் மாநகராட்சி சிறப்பு முகாமில் 235 பேர் மனுக்கள் அளிப்பு

திருவொற்றியூரில் மாநகராட்சி சிறப்பு முகாமில் 235 மனுக்களை மேயர் பிரியா ராஜன் பெற்று கொண்டார்

Update: 2023-08-10 16:00 GMT

திருவொற்றியூரில் சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற 'மக்களைத் தேடி மேயர்' திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் மேயர் பிரியா ராஜன்

சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் வியாழக்கிழமை நடைபெற்ற 'மக்களைத் தேடி மேயர்' சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மேயர் பிரியா ராஜன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை நேரடியாகப் பெற்றுக்கொண்டார்.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் 'மக்களைத் தேடி மேயர்' என்ற சிறப்புத் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் 15 நாள்களுக்கு ஒரு முறை மண்டலம் வாரியாக நேரடியாக பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நடடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கெனவே ராயபுரம், திரு.வி.க.நகர், அடையார் மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து சுமார் 889 பெற்றார். இதில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக மாகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 'மக்களைத் தேடி மேயர்' திட்டத்தின் 4-வது சிறப்பு முகாம் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டார். இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வரிசை எண்கள் வாரியாக பொதுமக்கள் மேயரிடம் மனுக்களை வழங்கினர்.

திருவொற்றியூர் நலசங்க நிர்வாகிகள் தொழிலதிபர் ஜி.வரதராஜன் தலைமையில் நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து குடியிருப்போர் நல சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்த கோரிக்கை மனுவை மேயரிடம் ஒப்படைத்தார். மேலும் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை பதிவு செய்து வரிசையில் நின்று மனுக்களை அளித்தனர்.

ஒவ்வொரு மனுவையும் மேயர் பிரியா ராஜன் பெற்றுக் கொள்ளும்போது மனுவின் சாராம்சங்கள் குறித்து மனு அளித்தவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார். பின்னர் கோரிக்கைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதியளித்தார். மதியம் வரை நடைபெற்ற இச்சிறப்பு முகாமில் சுமார் 235 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியின்போது 3 பெண்களுக்கு தையல் மெஷின்கள், இருவருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்களை உள்ளிட்டவைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.

இதில் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, திமுக பகுதி செயலாளர் ம.அருள்தாசன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News