சென்னை துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலப்பணிகள் அடுத்த மாதம் தொடக்கம்
அடுத்த மாதம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார் .
சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்த மாதம் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தெரிவித்தார் .
சென்னை துறைமுகம் சார்பில் 74- ஆவது ஆண்டு குடியரசு தின விழா சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை துறைமுக விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசியக் கொடியை பறக்க விட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது சுனில் பாலிவால் பேசியதாவது: தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சென்னை துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு சுமார் 20 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட தேசியக்கொடி அமைக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு பறக்க விடப்பட்டுள்ளது. நாட்டில் பழைமையான துறைமுகங்களில் மூன்றாவது இடம் வைக்கும் சென்னை துறைமுகத்தை நவீனப்படுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
சென்னை மக்களின் இதயத்தில் வீற்றிருக்கும் சென்னை துறைமுகம் இந்நகர மக்களின் வரவேற்பை பெறும் வகையில் திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளோம். போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தகுதியான ஒப்பந்ததாரர் தேர்வு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டு முப்பது மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாலம் செயல்பாட்டிற்கு வரும்.
மப்பேடு பல்நோக்கு லாஜிஸ்டிக்ஸ் பூங்கா: ஸ்ரீபெரும்புதூர் மப்பேடு அருகே பல்லோக்கு லாஜிஸ்டிக் பூங்கா அமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இப்பணிகள் வரும் மார்ச் 2025 ஆம் ஆண்டு முடிவடையும். துறைமுகத்திற்கு உள்ளே கூடுதல் வாகன நிறுத்த முனையம் ரூ 52 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
சித்த மருத்துவ பிரிவு தொடக்கம்: துறைமுக ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை துறைமுக மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது இங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சரக்குகள் கையாள்வது மட்டுமல்லாது பாதுகாப்பு, மீன்வளம், சுற்றுலா உள்ளிட்டவைகளின் வளர்ச்சியிலும் சென்னை துறைமுகம் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது என்றார் பலிவால்.
இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்ற சுனில் பாலிவால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் துறைமுக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
இந்நிகழ்ச்சியில் துறைமுக துணை தலைவர் பாலாஜி அருண்குமார், தலைமை கண்காணிப்பு அதிகாரி எஸ். முரளி கிருஷ்ணன், துணைத்தலைவர்கள் ஜெயசிம்மா, இந்திராணில் அஜிரா, மில்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.