இரும்பு தாதுக் கழிவுகளை கையாள்வதில் சென்னை துறைமுகம் புதிய சாதனை
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் கப்பலில் ஏற்றி சாதனை;
வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் கப்பலில் ஏற்றி சென்னை துறைமுகம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இரும்புத் தாதுவிலிருந்து இரும்பு பிரித்தெடுக்கப்பட்ட பிறகு வெளியேற்றப் படும் கழிவுகளை சில நிறுவனங்கள் சென்னைத் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
கடந்த பிப்.6-ம் தேதி சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த 24,200 மெட்ரிக் டன் இரும்பு தாதுக் கழிவுகளை ஒரே நாளில் எம்.வி.கிரேஸ் என்ற கப்பலில் ஏற்றி புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அக்.26, 2016-ஆம் தேதி எம்.வி. சாண்டோ ஹை ஷெங் என்ற கப்பலில் ஒரே நாளில் 18,700 மெட்ரிக் டன் இரும்புத் தாதுக் கழிவு ஏற்றியதே அதிகபட்ச சாதனை அளவாக இருந்து வந்தது.
துறைமுகத் தலைவர் பாராட்டு: இப்புதிய சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகமை நிறுவனமான அட்லாண்டிக் குளோபல் சிப்பிங், சரக்குகளை ஏற்றி, இறக்கும் நிறுவனமான பி.எல். டிரான்ஸ்போர்ட், ஏற்றுமதி நிறுவனமான ஜிம்பெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோரை சென்னை துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.