கடந்த ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய கடலோரக் காவல் படையினருக்கு விருதுகள்
கடந்த 2022-23-ம் ஆண்டில் சிறப்பாகச் சேவையாற்றிய கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது;
ஆண்டுதோறும் சிறப்பாகப் பணியாற்றிய கடலோரக் காவல் படையினருக்கான விருதுகளைகிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா வியாழக்கிழமை சென்னையில் வழங்கினார்.
இந்திய கடலோரக் காவல் படையில் பணியாற்றும் பல்வேறு படை பிரிவினருக்கு அவர்களின் சிறப்பான சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் வழங்கும் விழா சென்னையில் உள்ள கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய படைப் பிரிவை சேர்ந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
ஆறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்குக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின்போது 2022-ஆம் ஆண்டில் கடலோரக் காவல் படையினரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்த ஆவணப் படம் காண்பிக்கப்பட்டது. கட்டுரை மற்றும் புகைப்படம் எடுத்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை ஏ.பி.படோலா நேரில் அழைத்துப் பாராட்டினார். நிகழ்ச்சியின்போது கடலோர காவல்படையினர் பங்கேற்ற சாகச நிகழ்ச்சிகளை நடைபெற்றன.
உலகின் நான்காவது பெரிய கடலோர காவல்படையாக இருக்கும் இந்திய கடலோர காவல்படை கடந்த 1977-ல் நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி உள்ளது. 1978-ல் வெறும் ஏழு சர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம்களில் இருந்து தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல்படையானது (ICG) தற்போது 158 கப்பல்கள் மற்றும் 70 விமானங்களைக் கொண்ட ஒரு வல்லமைமிக்க சக்தியாக வளர்ந்து நிற்கிறது.
வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் ICG 200 சர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் 100 ஏர்கிராஃப்ட் என்ற இலக்கு படை நிலைகளை அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல்படையாக இருக்கும் இந்திய கடலோர காவல்படை, இந்திய கடலோரப் பகுதி மற்றும் எல்லைகளை பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
வெள்ளம், சூறாவளி மற்றும் பிற இயற்கை பேரிடர்களின் போது சிவில் அதிகாரிகளுக்கு இந்திய கடலோர காவல்படை பெரும் உதவிகளை வழங்கி உள்ளது. கோவிட் -19 தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ICG பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் தினசரி சுமார் 50 கப்பல்கள் மற்றும் 12 விமானங்களை நிலைநிறுத்தியதன் மூலம் 24 மணிநேர கண்காணிப்பை தொடர்ந்து செய்து வருகிறது.
இதனிடையே கடலோர காவல்படை தினம் நாட்டின் கடல் பரப்பை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தும் படைகளின் பணியை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு இந்தியா 46-வது இந்திய கடலோர காவல்படை தினத்தை அனுசரிக்க்கும் நிலையில், கடலோர காவல்படை தன்னார்வத் தொண்டு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் நமது நாட்டின் எல்லைகளைக் காத்தல் போன்ற முக்கிய பொறுப்புகளை சிறப்பாக செய்து வருகிறது.