மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
திருவொற்றியூர் பெரியார் நகரில் அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.;
மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருவொற்றியூர் பெரியார் நகரில் அரசு உதவி பெறும் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 17 வயதிற்கு உட்பட்ட 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பி.பிரதாப் பாஸ்வான், சி.யோகசுந்தர், பா.சுபாஷ், சி.லோகேஸ்வரன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
இதேபோல் 14 வயதிற்கு உட்பட்ட 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற லோ.அர்ச்சனா மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 34 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் சு.சுந்தர், தலைமை ஆசிரியர் தி.பஞ்சநாதன், உதவி தலைமை ஆசிரியர் அ.சுப்பையன், உடற்கல்வி இயக்குனர் ரீ.மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
தடகள விளையாட்டுக்கள் (Athletics) எனப்படுவது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல்,நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கினைப்பை இவை சோதனை செய்கின்றன. பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்ஸ் காலத்திலிருந்தே அறியப்படுகிறது. தற்காலத்து பல நிகழ்வுகளை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தினரின் பல்வேறு உறுப்பினர் சங்கங்களை நடத்தி வருகின்றன.இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.