ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற பெண் வெளியுறவுத் துறை மூலம் பத்திரமாக மீட்பு

சுதா ஜாஸ்மின் தனது தாயார் மஞ்சுவிடம், தன்னை காப்பாற்றி அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அழுது புலம்பியுள்ளார்

Update: 2023-02-01 11:45 GMT

ர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சுதா ஜாஸ்மினை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்ற பெண் சுதா ஜாஸ்மின் (36) கொடுமைக்கு உள்ளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டு பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் சுதா ஜாஸ்மின் (36). இவரது கணவர் யாசர் அராபத். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கணவர் யாசர் அராபத் இறந்து போய்விட்டார். இதனையடுத்து குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக முகவர் ஒருவர் மூலம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். ஆனால் சென்ற இடத்தில் மிகக் கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டதாகவும், மாதச் சம்பளம் ரூ. 35 ஆயிரம் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் ரூ.22 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பிய சுதா ஜாஸ்மின் தொடர்ந்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தன்னை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புமாறு கோரிய நிலையில் இதற்கும் வேலைக்கு வரவழைத்தவர், வேலைக்கு அனுப்பியவர் உள்ளிட்ட யாரும் செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து சுதா ஜாஸ்மின் தனது தாயார் மஞ்சுவிடம், தன்னை காப்பாற்றி அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து அழுது புலம்பியுள்ளார்.

இதனையடுத்து திருவெற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கரிடம் ஓமன் நாட்டில் கொடுமைக்கு ஆளாகி வரும் தனது மகளை மீட்டுத் தர வேண்டும் சுதா ஜாஸ்மினின் தாயார் மஞ்சு வேண்டுகோள்விடுத்துள்ளார். இதனையடுத்து இப்பிரச்னையை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி மூலமாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் சுதா ஜாஸ்மின் இருப்பிடத்திற்கு சென்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சுதா ஜாஸ்மின் கொடுமைக்கு உள்ளானது அம்பலமானது.

இதனையடுத்து தூதரக அதிகாரிகள் சுதா ஜாஸ்மினை மீட்டு விமானம் மூலம்  சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சுதா ஜாஸ்மினை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் மற்றும் உறவினர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். வேலைக்குச் சென்ற இடத்தில் கொடுமைக்கு உள்ளான தன்னை பத்திரமாக மீட்க உதவிகரமாக இருந்த அனைவருக்கும் சுதா ஜாஸ்மின் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்குச் சென்று கொடுமைக்கு உள்ளாகி வெளியுறவுத் துறை மூலம் மீட்கப்பட்டு திங்கள்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த சுதா ஜாஸ்மினை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற வடசென்னை மக்களவ உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி. உடன் திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் உள்ளார். 

Tags:    

Similar News