திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை சீரமைக்கும் திட்டம்
திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை சீரமைக்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்
திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கடற்கரை சீரமைக்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவொற்றியூர் கடற்கரை பகுதிகளை சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் திட்டம் குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.
அண்மையில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வடசென்னையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் சார்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் சுங்கச்சாவடி முதல் பாரதியார்நகர் வரை உள்ள கடற்கரை பகுதியை ரூ.30 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து அழகுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள், செயற்கை நீருற்றுகள், நடைபயிற்சிக்கான சிறப்பு பாதைகள் உள்ளிட்டவை இத்திட்டத்தில் அடங்கும்.
வடசென்னையின் வளர்ச்சியில் முக்கிய வகிக்கப் போகும் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் பி.கே.சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது திட்டத்தின் சிறப்பம்சங்கள், நிதி ஒதுக்கீடு, திட்ட அறிக்கை உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
ரூ. 5 கோடி செலவில் வணிக வளாகம்: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம் மார்க்கெட் பகுதியில் பழைமையான வணிக வளாகத்தை இடித்துவிட்டு ரூ. 5 கோடி மதிப்பீட்டில் சுமார் 50 கடைகள் மற்றும் சமுதாயக் கூடத்துடன் கூடி புதிய கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடத்தை அமைச்சர் சேகர்பாபு திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வின்போது வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் திருவொற்றியூர் கே.பி.சங்கர், மாதவரம் எஸ்.சுதர்சனம், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி, மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, தி.மு.க. பகுதி செயலாளர் எம்.அருள்தாசன், மாமன்ற உறுப்பினர்கள் கே.பி.சொக்கலிங்கம், மு.சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.