10 வயது பள்ளி மாணவன் தூக்கில் தொங்கியபடி மரணம்: போலீசார் விசாரணை
திருவொற்றியூரில் 10 வயது பள்ளி மாணவன் புடவையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததால் பரபரப்பு.;
சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடைகுப்பம், ஏ பிளாக்கை சேர்ந்தவர் பரத்குமார் மெக்கானிக், இவரது மகன் ரித்திக்(வயது 10) புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தான். தந்தை நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். தாய் பூஜா(எ)யமுனா தேவி, ரித்திக்கை வீட்டில் விட்டு விட்டு, ரேசன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் உள்பக்கம் கதவு பூட்டப்பட்டிருந்தது, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து சென்றபோது, தொட்டில் மாட்டும் கொக்கியில், தாயின் புடவையில் ரித்திக் தூக்கு மாட்டி இறந்து கிடந்தான். அதிர்ச்சியடைந்து தாய் பூஜா கதறி அழுதார்.
தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து, ரித்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சிறுவன் ரித்திக் ஊஞ்சல் ஆடும் போது புடவை சுருக்கு மாட்டி இறந்தானா. அல்லது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டானா என விசாரணை நடத்தி வருகின்றனர்.