புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெண் பலி
சென்னை அருகே, புளியந்தோப்பில் மின்சாரம் பாய்ந்து வடமாநில பெண் பலியானார்.;
சென்னை புளியந்தோப்பு அம்மையம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பியாரிலால் 50. இவரது மனைவி மீனா வயது 45 உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர்கள், 30 வருடங்களுக்கும் மேலாக புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருகின்றனர். பியாரிலால், பேசின் பிரிட்ஜ் பகுதியில் சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார். கனமழை காரணமாக புளியந்தோப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, மின்சாரம் தடைபட்டது.
இந்நிலையில் மீனா நேற்று தனது வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி, கடைக்கு செல்வதற்காக வீட்டு வாசலில் இருந்த இரும்பு கிரில் கேட்டை பிடித்துக் கொண்டு வெளியே காலை வைத்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.