போதையில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்த இளம்பெண்: போலீசார் விசாரணை
ஓட்டேரியில் முழு மதுபோதையில் மாநகர பேருந்து கண்ணாடிகளை அடித்து உடைத்த இளம்பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
சென்னை கொரட்டூரிலிருந்து பாரிமனை வரை தடம் எண் 35 என்ற பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் 42 என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை 7 மணியளவில் வழக்கம்போல கொரட்டூரில் இருந்து பேருந்து கிளம்பி பாரிமுனை சென்றுவிட்டு, மீண்டும் ஓட்டேரி வழியாக கொரட்டூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக பேருந்து வந்தபோது 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடி போதையில் சாலையில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓட ஆரம்பித்தனர். உடனடியாக வண்டியை நிறுத்திய டிரைவர் இது குறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார், குடிபோதையில் இருந்த அந்தப் பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் அம்பத்தூர் ரயில்வே பிளாட்பாரம் பகுதியில் வசிக்கும் வேளாங்கண்ணி வயது 21 என்பதும் குடிபோதையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு போதையில் ரகளை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.