ஓட்டேரியில் கள்ளச்சந்தையில் விற்க மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிய 4 பேர் கைது
ஓட்டேரியில் கள்ளச்சந்தையில் மது விற்க மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிய 4 பேர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சிலர் அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்குவதாக புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அந்தக் கடைக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கிருந்து ஆட்டோவில் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு 4 பேர் கிளம்பி சென்றனர் அவர்களை பின்தொடர்ந்து சென்ற போலீசார் அம்பேத்கர் கல்லூரி சாலை அம்மா உணவகம் அருகே அவர்களை மடக்கிப் பிடித்தனர். ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 300 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் வியாசர்பாடி சுந்தரபுரம் 3 வது தெருவைச் சேர்ந்த தன்ராஜன் 42. அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் 37 மணிகண்டன் 29 மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 39 என்பது தெரியவந்தது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதினால் அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கண்டு கூடுதல் விலைக்கு விற்பதற்காக இவர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது.
விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிட்ட நபர்களுக்கு மொத்தமாக மதுபாட்டில்களை வழங்கக் கூடாது என்று ஏற்கனவே டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஒரே நபருக்கு 300 மதுபாட்டில்களை வழங்கிய குறிப்பிட்ட அந்தக் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.