ஓட்டேரியில் தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போராட்டம்

ஓட்டேரியில் தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-08 05:00 GMT

மருத்துவரின் தவறான சிகிச்சையால் இறந்தாக கூறப்படும் வாலிபர்

சென்னை ஓட்டேரி சாலை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் வயது 39 இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று இரவு குமாருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனை அடுத்து ஓட்டேரி பிரிக்கிளின் சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது நண்பர்கள் அழைத்து சென்றனர். அங்கு குமாருக்கு குளுக்கோஸ் போட்டுள்ளனர் மேலும் ஊசியும் போட்டதாக கூறப்படுகிறது.

 திடீரென்று குமாருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்தார். இதனையடுத்து குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குமாரின் நண்பர்கள் 5க்கும் மேற்பட்டோர் ஓட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர் வீரமணியிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த கண்ணாடி மற்றும் கார்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை உயிரிழந்த குமாரின் உறவினர்கள் ஓட்டேரி துணை கமிஷனரிடம் இது குறித்து முறையிட்டனர். மேலும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கதறி அழுதனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து ஓட்டேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அடுத்த கட்ட நகர்வு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News