வெற்றி விழா கூட்டத்தில் சி.பி.எம். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு

சென்னையில் நடந்த வெற்றி விழா கூட்டத்தில் சி.பி.எம். கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.

Update: 2021-12-28 12:06 GMT

சென்னையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி விழா கூட்டம் நடைபெற்றது.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடிசைமாற்று) வாரிய குடியிருப்புகளுக்கு 1.50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.  இதற்கான வெற்றிமுழக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் நடைபெற்றது.

கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் குடிசைமாற்று வாரியம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசும், தமிழக அ.தி.மு.க. அரசும் ஒப்பந்தம் போட்டன. அதன்படி, பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.குடியிருப்புகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது, மறுகுடியமர்வு என்ற பெயரில் குப்பைகளை போல் மக்களை கொண்டு சென்று நகருக்கு வெளியே கொட்டுவது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது.

இதனால், அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. கே.பி.பார்க் உள்ளிட்ட பகுதி மக்களை நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை. மாறாக, குடியிருக்கும் பகுதியிலேயே வீடுகள் புதுப்பித்தும், புதிய வீடுகள் கட்டியும் கொடுக்கப்படுகின்றன. 

கே.பி.பார்க் குடியிருப்பை 2019ஆம் ஆண்டே கட்டி முடித்தாலும் அ.தி.மு.க. அரசு பயனாளிகளுக்கு ஒதுக்கவில்லை. குடியிருப்பு கட்ட ஒதுக்கிய நிதியில் 40 விழுக்காட்டை அ.தி.மு.க. அமைச்சர்களும், அதிகாரிகளும் கமிஷனாக ஒதுக்கிக் கொண்டனர். இதனால் தரமற்ற வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பி.எஸ்.டி. நிறுவனம் சிமெண்டிற்கு பதிலாக மண்ணை வைத்து சுவற்றை பூசியது.

இருப்பினும், சாலையோரம் சாக்கடையில் அவதிப்படும் மக்களுக்கு வீடுகளை வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தியது. பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதேசமயம் பயனாளிகள் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த அரசு உத்தரவிட்டது.

இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் மீண்டும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. மறுபுறம், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். இதனால் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த தி.மு.க. அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

கே.பி.பார்க் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் பலனை தமிழக மக்கள் முழுவதும் அனுபவிக்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்காது. மக்களின் உணர்வுகளுக்கும், போராட்டங்களுக்கும் மதிப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோரை பாராட்டுகிறோம்.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பாண்டிச்சேரியில், ரேசன்கடைகளில் அரிசிக்கு பதிலாக பணம் தருகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி நீடித்திருந்தால் தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தி இருப்பார்கள். இத்தகைய மோசமான திட்டங்களை ஆட்சி மாற்றத்தின் மூலம் தடுத்துள்ளோம். விவசாயிகளின் போராட்டம் ஒன்றிய அரசை மண்டியிட வைத்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி வீழும்வரை மக்களுக்கு நன்மை விளையாது.

மோடியின் தோல்வி தொடங்கிவிட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்தையும், கொள்கை மாற்றத்தையும் கொண்டு வர ஒன்றுபட்டு போராடுவோம். என பேசினார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா . மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News