மகாத்மா காந்தி புகைப்பட & டிஜிட்டல் கண்காட்சியை தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்
மகாத்மா காந்தி புகைப்பட & டிஜிட்டல் கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
நாட்டின் சுதந்திர தின பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட & டிஜிட்டல் கண்காட்சி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர், புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காந்தியின் இளமைக்காலம், வெளிநாட்டில் அவரது கல்வி மற்றும் செயல்பாடு, தாயகம் திரும்பியது, தமிழக வருகை, அதன் பின்னர் அரை ஆடைக்கு மாறியது, பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தது, அவரது மறைவு வரையிலான அனைத்து புகைப்படங்களையும் ஆளுநர் பார்வையிட்டார்.
பின்னர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த டிஜிட்டல் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநர், காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து சுமார் 50 நிமிடங்கள் ஓடும் காணொலி காட்சியையும் தொடங்கி வைத்தார். இந்த காணொலி காட்சியில் பின்னணி குரல் வாயிலாகவும் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு விவரிக்கப்படுகிறது. இந்த காணொலி காட்சியை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்திருந்த 3 வீடியோ வாகனங்களையும் ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த பெரிதும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கண்காட்சியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தகவல் ஒலிபரப்புத் துறையின் புத்தக வெளியீட்டு பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்திய பிரிவினை குறித்த வரலாறு ("The Story of India's Partition") மற்றும் தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் சந்தித்த இன்னல்கள் ("Gandhi ordained in South Africa") ஆகிய இரண்டு நூல்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, முதல் பிரதியை தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் டி.கே.ஓசா மற்றும் நரேஷ் குப்தா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி, மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் ஜெ.காமராஜ், பத்திரிகை தகவல் அலுவலக இயக்குனர் குருபாபு பலராமன், இணை இயக்குனர் டி.நதீம் துஃபைல், புத்தக வெளியீட்டுப் பிரிவு உதவி இயக்குனர் சஞ்சய் கோஷ், மண்டல மக்கள் தொடர்பு கண்காட்சி அதிகாரி எஸ்.முரளி, மக்கள் தொடர்பு கள அலுவலர் ஆனந்த் பிரபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.