சொத்து மற்றும் தொழில் வரி கடந்த ஆண்டை விட 35% கூடுதலாக வசூல்
சென்னை மாநகராட்சியில் ரூ.1,297.70 கோடி வரி வசூல் - கடந்த நிதி ஆண்டில் சென்னை மாநகராட்சியில் வசூலிக்கப்பட்ட வரி கணக்கு;
சொத்து மற்றும் தொழில் வரி கடந்த ஆண்டை விட 35% கூடுதலாக வசூல் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் ரூ.1,297.70 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு இருமுறை சொத்து வரியும், ஆண்டுக்கு ஒருமுறை தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. நிதியாண்டு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, கடந்த நிதி ஆண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் வசூலிக்கப்பட்ட வரி கணக்கு விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, கடந்த 2021-22 நிதி ஆண்டில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து, தொழில் வரி மற்றும் இதர வரிகள் மூலம் ரூ.1,297.70 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 8.20 லட்சம் பேரிடமிருந்து ரூ.778.07 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. ரூ.462.35 கோடி தொழில் வரியாகவும், ரூ.57.28 கோடி இதர வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-21 நிதி ஆண்டில் ரூ.471.66 கோடி சொத்து வரி, ரூ.448.36 கோடி தொழில் வரி, ரூ.39.32 இதர வரிகள் என மொத்தம் ரூ.959.34 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தாமல் ₨230 கோடி நிலுவையில் உள்ளது. பிரபல நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவு நிலுவை வைத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது