முன்னாள் அமைச்சர் பண்ருட்டியுடன் சசிகலா திடீர் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு
தமிழக அரசியலானது எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்பை கொண்டிருக்கும். அந்த வகையில் அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுக் கிடக்கும் வேளையில் முன்னாள் முதல்வரின்தோழி சசிகலா திடீரென முன்னாள் அதிமுகஅமைச்சர்பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்திருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
சென்னை: தமிழக அரசியலில் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த வகையில் ஓபிஎஸ், இபிஎஸ் அணியின் பிரச்னை அதிமுகவில் ஒரு புறம் என்றால் முன்னாள் முதல்வரின் தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையிலிருந்து வெளியில் வந்தும் அதிமுகவில் சேர முடியவில்லை. இதற்காக அவரும் என்னவோ பிரம பிரயத்தனம் செய்து காய் நகர்த்தி வருகிறார். ஆனால் முடிவுதான்இன்று வரை கிட்டவில்லை. அவ்வப்போது அறிக்கைகளை விட்ட சசிகலா தற்போது முன்னாள் அதிமுக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்திருப்பது அரசியலில் ஏதாவது திருப்பம் வருமா? என்ற எதிர்பார்ப்பில் அரசியல் நோக்கர்கள் உள்ளனர்.
அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா இன்றைய தினம் சந்தித்துள்ள நிலையில் நாளை அவர் யாரை சந்திப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை திட்டத்தை முறியடிக்க ஓ பன்னீர் செல்வம் எத்தனையோ பிரயத்தனங்களை செய்தும் அது முடியாமல் போனது. இதனால் கடைசி அஸ்திரமாக அவர் நினைத்திருப்பது சசிகலாவுடனான சந்திப்பைத்தான் என்கிறார்கள். வெகு விரைவில் சசிகலாவை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான் அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்படவில்லை, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து யாரும் நீக்கவில்லை என தனது ஆதரவாளர்களை வைத்து ஓபிஎஸ் பேச வைப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
ஜூனியர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் செயல்படுவதை காட்டிலும் சசிகலா தலைமையில் செயல்படுவதை ஓபிஎஸ் கவுரவமாக கருதுகிறார் என்கின்றனர்.. இதற்காகவே டிடிவி தினகரனுடன் ரகசிய சந்திப்பு நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரே குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் டிடிவி தினகரனோ அதிமுக விவகாரத்தில் பிடி கொடுக்கவில்லை.
தேர்தல் ஆணையம், சசிகலா ஆகிய இரு அஸ்திரங்களை ஓபிஎஸ் மலை போல் நம்பியுள்ளார். இதில் தேர்தல் ஆணையம் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் தலைமை கழகத்தின் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் சென்னையில் அசோக் நகரில் உள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா கூறுகையில் ஓபிஎஸ்ஸும் நானும் இணைந்து செயல்படுமாறு தேவர் அமைப்புகள் எழுதிய கடிதம் குறித்து கேட்கிறீர்கள். என்னை பொருத்தமட்டில் அதிமுகவில் உள்ள அனைவருமே எனக்கு வேண்டப்பட்டவர்கள்தான். அதனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
அதிமுக என்பது ஒரே குடும்பம்
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது ஜாதியையும் பார்த்ததில்லை மதத்தையும் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் அனைவர் மனதிலும் இருக்கிறது. இயக்கம் அதிமுக என்பது எல்லாரையும் ஒன்றாக நினைக்கும் ஒரு இயக்கமாகும். ஒன்றிணைத்து செல்ல கூடிய நிலையில்தான் எனது நகர்வுகள் இருக்கும். அதிமுக என்பது நிறுவனம் அல்ல. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில்தான் 50 ஆண்டுகளாக இந்த கட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதை நிலைநிறுத்துவதுதான் எனது கடமையும் கூட,
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவர். நான் எடப்பாடி பழனிசாமி பக்கமா ஓபிஎஸ் பக்கமா என கேட்டால் நான் யார் பக்கமும் இல்லை. தொண்டர்களும் மக்களும் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்னுடைய நிலைப்பாடாக இருக்கும் என சசிகலா தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சியில் உள்ளார். இன்றைய தினம் பண்ருட்டியாரை பார்த்தது போல் சசிகலா தனது அரசியல் பயணத்தில் நிறைய மூத்த தலைவர்களையும் நிர்வாகிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவரது பயணத்தில் அவருக்கு ஏதேனும் சிறிய ஒளி கிடைத்தாலும் அது அவரது முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். பண்ருட்டியாருடனான சசிகலாவின் சந்திப்பு குறித்து எடப்பாடிப ழனிசாமி தரப்பினர் சிலரிடம் கேட்ட போது, "தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும் தான் எப்போதும் லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த புரட்சி பயணத்தை தொடங்கியுள்ள சசிகலாவுக்கு எந்த பலனும் கிடைக்காது " என எடப்பாடி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.