சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிறப்பு சிகிச்சை மையம்..!
காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1.05 கோடியில் பேட்டரி கார், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.;
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக 150 படுக்கைகளுடன் கூடிய புதிய வார்டு திறந்து விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகம் சார்பில் நோயாளிகளுக்கான 8 பேட்டரி கார்கள், 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.
கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய்த் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கென அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சைநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் புதிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 படுக்கைகள் தீவிர சிசிச்சை வசதிகள் கொண்டதாகும். காது,மூக்கு, தொண்டை மருத்துவம், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, கண் மருத்துவம், நுண்ணுயிரியல், பொது மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நவீன பகுப்பாய்வகம், அறுவைச் சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். மேலும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கும் டிஜிட்டல் தகவல் பலகையையும் உதயநிதி திறந்து வைத்தார்.
காமராஜர் துறைமுகம் சார்பில் ரூ.1.05 கோடி நிதி உதவி:
இந்நிகழ்ச்சியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் செலவிலான 75 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக ரூ. 50 லட்சம் செலவில் 8 பேட்டரி கார்கள் உள்ளிட்டவைகளை துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் ஸ்டான்லி மருத்துமனையின் பயன்பாட்டிற்காக சிறப்பு விருந்தினர் உதயநிதியிடம் ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில் இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, ராயபுரம் எம்.எல்.ஏ. மூர்த்தி, கல்லூரி முதன்மையர் டாக்டர் பி.பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.