சென்னையில் 3,300 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: மேயர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 3,300 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக மேயர் பிரியா தகவல்

Update: 2022-05-06 06:54 GMT

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் 28 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் இதுவரை 37,11,689 நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் கோவிட் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள நபர்களில் இதுவரை 99% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 84% நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வருகின்ற 08.05.2022 அன்று 1 இலட்சம் கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 08.05.202 அன்று கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்துவது குறித்த பல்வேறு சேவைத் துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா கூறுகையில், 08.05.2022 அன்று சென்னையில் 3,300 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள நினைவூட்டல் சீட்டு வழங்கப்பட உள்ளது. இந்தச் சீட்டில் அவர்களுக்கு அருகாமையில் உள்ள மெகா தடுப்பூசி முகாம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும்.இந்த மெகா தடுப்பூசி முகாமிற்காக 1,600 குழுக்கள் அமைக்கப்பட்டு, வார்டிற்கு ஒரு முகாம் என 200 நிலையான முகாம்களும், மீதமுள்ள 1,400 குழுக்கள் 3,100 இடங்களில பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த உள்ளனர் இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக இரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஈடுபட உள்ளனர்.

எனவே, முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், இரண்டாம் வணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் தங்கள் பகுதிக்கு அருகாமையிலேயே நடைபெற உள்ள மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு கூறினார். 

Tags:    

Similar News