விவசாய கடன் வேண்டுமா? அட்டை பெற இன்று முதல் மே 1ம் தேதி வரை முகாம்
விவசாயிலுக்கு கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 38.25 லட்சம் விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டம் (பிஎம் கிசான்) மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் இன்று (24ம் தேதி) முதல் 1.5.2022 வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் இதுவரை விவசாய கடன் அட்டை பெறாத பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுகிறது.
விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடன்களுக்கும், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர் நடைமுறை கடன்களுக்கும் ரூ.3 லட்சம் வரையிலும், மேலும் மாடு வளர்த்தல், ஆடு வளர்த்தல், கோழி வளர்த்தல், மீன் வளர்த்தல் போன்ற செயல்பாடுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கி கடன் பெற முடியும். விவசாய கடன் அட்டை திட்டத்தின்கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முறையாக தவணை தவறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியமாக பெறலாம். இந்த திட்டத்தில் வழங்கப்படும் கடன் தொகையானது விவசாயிகளின் நிலவரம்பை பொறுத்து மாறுபடும். விவசாய கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், மண்டல ஊரக வங்கிகள், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம அளவில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் பெறலாம்.
விவசாய கடன் அட்டை இல்லாத விவசாயிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விவசாய கடன் அட்டை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.