பஹ்ரைனுக்கு அனுப்ப இருந்த 3.5 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் : இருவர் கைது
3 வாரத்தில் 3 முக்கிய போதைப் பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு -மண்டல இயக்குனர்.
பஹ்ரைனுக்கு அனுப்ப இருந்த 3.4 கிலோ கஞ்சா எண்ணெய், ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப இருந்த சூடோபெட்ரைன் என்ற போதை மாத்திரைகள் ஆகியவற்றை போதைப் பொருள் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உளவுத் தகவல் அடிப்படையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் (என்சிபி) கொச்சின் துணை மண்டல அதிகாரிகள், எர்ணா குளத்தில் கடந்த மாதம் 12ம் தேதி அன்று 3.5 கிலோ கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். இது கூரியர் மூலம் பஹ்ரைன் அனுப்பப்படவிருந்தது. இந்த பார்சலை அனுப்பியவர் பெங்களூரில் கடந்த மாதம் 29ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளி காசர்கோட்டில், இன்று கொச்சி என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கொச்சி என்சிபி அதிகாரிகள் அளித்த தகவல்படி, 11.6 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் போதை மாத்திரைகள் அடங்கிய கொரியர் பார்சல் எர்ணாகுளத்தில் கடந்த 22ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட விருந்தது.
சென்னை மண்டல என்சிபி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் படி 8 கிலோ சூடோபெட்ரைன் மாத்திரைகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஏர் கார்கோ, பிரிவில் கடந்த மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் பறிமுதல் செய்யப்பட்டன. இதை காரைக்காலில் இருந்து அனுப்பியவர் சென்னையில் கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்கனவே 4 கிலோ சூடோபெட்ரைன் போதை மாத்திரைகளை அனுப்பியுள்ளார். இத்தகவல் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு, அந்த பார்சல் ஆஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்டது.
3 வாரத்தில் 3 முக்கிய போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை சென்னை போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் முறியடித்துள்ளதாக, அதன் மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.