டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது: ரூ.18,900 பறிமுதல்

டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது செய்த போலீசார் ரூ.18,900 பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-17 19:00 GMT

கள்ள நோட்டுக்களுடன் கைதான அஜாஸ், அம்ரூதீன்.

சென்னை கிண்டி மடுவின்கரை அருகே செயல்பட்டு வரும், அரசு டாஸ்மாக் மதுபான கடையில் நேற்றிரவு மது பானம் வாங்க வந்த ஒருவர் 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த விற்பனையாளர் சரவணன் அது கள்ள நோட்டு என்பதை கண்டு பிடித்து கிண்டி போலீசாரை வரவழைத்து அவரை பிடித்து கொடுத்தார். அப்போது அவரிடம் இருந்து இரண்டு 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் திருவல்லிகேணியை சேர்ந்த அஜாஸ்(37), என்பதும், புரோக்கர் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அஜாஸுக்கு கள்ள நோட்டை கொடுத்த அம்ரூதீன் என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களின் வீடுகளில் சோதனை செய்து 90, இருநூறு ரூபாய் கள்ள நோட்டும், ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும் என மொத்தம் 18,900 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

1000 ரூபாய் கள்ளநோட்டை மாற்றிக் கொடுத்தால் 400 ரூபாய் கமிஷன் என்பதால் நோட்டு மாற்றும் வேலையில் இருவரும் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டை கொடுத்து புழக்கத்தில் விட்ட முக்கிய குற்றவாளியை கிண்டி குற்றபிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இருவர் மீதும் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

Tags:    

Similar News