நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் கோர்ட்டில் ஆஜர்
நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஹரி நாடார் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பண மோசடி வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி நாடாரை , நடிகை விஜயலட்சுமி கொடுத்திருந்த புகார் தொடர்பான விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்த திருவான்மியூர் காவல்துறையினர் இன்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையின் நிறைவில் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி தீர்ப்பளிக்கப்படது. எனவே ஹரி நாடார் பிப்ரவரி 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட உள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி , தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி , சீமானுக்கு ஆதரவாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஹரி நாடார் மீது புகாரளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹரி நாடாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தரப்பில் நீதிபதியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் , நாளை காலை 10 மணிக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் அது தொடர்பான விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.