நிலக்கரி விலை அதிகரிப்பு, இறக்குமதி பாதிப்பு.. -மின் தடை ஏற்படும் அபாயம்!
ரஷ்யா - உக்ரைன் போரால் நிலக்கரி விலை அதிகரித்து, இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.;
கோடை காலம் துவங்கியதையடுத்து நாட்டில் மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டதால், இந்தமாத துவக்கத்தில் பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா - உக்ரைன் போரால் நிலக்கரி விலை அதிகரித்து, இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர், மாநில மின் மற்றும் நிலக்கரி துறை உயர் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிலக்கரி உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், நிலக்கரி இறக்குமதியை மேற்கொள்ள, மாநில அரசுகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி விரைவில் பரிசீலிப்பதாக, மத்திய மின் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.