மழைச்சேதம்: முதல்வரின் உத்தரவை தொடர்ந்து காசிமேட்டில் அமைச்சர் ஆய்வு
முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை காசிமேட்டில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.;
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட படகுகளின் சேதங்கள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சேதமடைந்த படகுகளை பார்வையிட்ட அமைச்சர்கள் பாதிப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவதுள் கனமழையால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில உட்பட அனைத்து மீன்பிடி துறைமுகங்களின் சேதங்களை ஆய்வு மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் உத்தரவை தொடர்ந்து, இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும் படகு சேதவிவரங்கள் உட்பட அனைத்து சேதங்களையும் அறிக்கையாக தயார் செய்து, முதல்வர் பார்வைக்கு எடுத்து செல்வோம். சேத அறிக்கைக்கு பின்னரே மீனவர்களுக்கு இழப்பீடு குறித்து முதல்வர் தெரிவிப்பார் என அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மீன்வளத்துறை இயக்குனர் பழனிச்சாமி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.