எண்ணூா் பகுதியில் பறவைகளை மீட்கும் பணிதொடரும்: வனத் துறை செயலா்
எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெறும் என வனத் துறைச் செயலா் தெரிவித்துள்ளார்.;
சென்னையில் பெய்த கனமழை காரணமாக மணலி பகுதியிலுள்ள சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கசிவு பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூா் முகத்துவாரம் பகுதியில் கலந்தது. இது சதுப்பு நிலப் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல பறவை இனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் எண்ணெயில் நனைந்த நாரைகள் நிறம் மாறியதுடன் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனையடுத்துவனத் துறையினா், பறவை ஆா்வலா்கள் உள்பட பலரும் இந்தப் பறவைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து தமிழக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாஜு ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
எண்ணூா் கழிமுகத்தில் எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இப்பகுதி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு குறைந்த வேக கடல் நீா் ஜெட் பைப்புகள் மூலம் எண்ணெய்ப் படலத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. எண்ணெய்ப் படலம் அனைத்தும் பாதுகாப்பாக அகற்றப்படும்.
சுமார் 60 ஹெக்டோ் அலையாத்தி காடுகளை (சரபுன்னை) சுத்தம் செய்வது கடினமான செயல்முறை ஆகும். ஆனாலும் பணிகள் தொடா்ந்து நடைபெறும். தமிழக வனத் துறையினருடன், இந்திய வனவிலங்கு அறக்கட்டளை மற்றும் பெசன்ட் மெமோரியல் டிஸ்பென்சரி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து எண்ணெயால் பாதிக்கப்பட்ட பறவைகளை தொடா்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தன்னார்வலா்கள் மற்றும் வல்லுநா்கள் உள்பட 15 போ் கொண்ட குழு கழிமுகப் பகுதியில் இறங்கி ஆபத்தில் உள்ள பறவைகளைத் தேடிச் சென்று மீட்டு வருகின்றனா். இதில் ஒரு நாரை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பறவைகளை மீட்கும் இந்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு தொடா்ந்து நடைபெறும் எனப் பதிவிட்டுள்ளார்