ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டின் தின்பண்டங்களில் எலி: டீன் அதிரடி உத்தரவு
பஜ்ஜி, போண்டா வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் எலி ஒன்று நடமாடிக் கொண்டு இருந்ததை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
தின்பண்டங்கள் மீது ஓடி திரியும் எலி
ஏழை மக்களின் முக்கியமான மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் அமைந்துள்ள கேண்டீனில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களை எலி தின்று செல்லும் காட்சி வெளியானது. இதையடுத்து சம்மந்தப்பட்ட கேண்டினை மூட சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைவிட மிகவும் அதிகப்படியான வசதி உள்ள மருத்துவமனை தான் ஸ்டான்லி மருத்துவமனை.. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். வட சென்னையில் உள்ள ஏழை மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவமனையாகும்..
அந்த அளவிற்கு புகழ் பெற்ற ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைந்துள்ளது. நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் என பலரும் மருத்துவமனைக்கு வருகை தருவதால் ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக மருத்துவமனை வளாகத்தில் தனியார் நடத்தி வரும் கேண்டீன் ஒன்றும் உள்ளது.
அங்கு விற்பனைக்காக கண்ணாடி ரேக்குகளில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று வேகமாக உள்ளே வந்து தின்று செல்லும் காட்சிகள் வெளியானது. கண்ணாடி பெட்டியில் இருந்த வடை, பஜ்ஜி போன்றவற்றை எலி சாப்பிட்டு விட்டு சென்றது.
இந்த நிலையில், பஜ்ஜி, போண்டா வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் எலி ஒன்று நடமாடிக் கொண்டு இருந்ததை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எலி ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.