"கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்கள்" -அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
கொள்ளையடிப்பதற்கு வசதியாக நீட் பயிற்சி மையங்கள் உள்ளன என்று அமைச்சர் பொன்முடி பல்கலை விழாவில் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் தமிழக ஆளுநரும், சென்னை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.
சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன். நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் வழி வகுக்கும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது. மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும், அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம், என்று பேசினார்.