சென்னையில் வரும் 14ம் தேதி அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்
சென்னையில் வரும் 14ம் தேதி அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அஞ்சல்துறையின் சார்பில் கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் உள்ள தலைமை போஸ்ட் மாஸ்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அஞ்சல் துறையின் சேவைகள் குறித்த பொதுமக்களின் குறைகளை தலைமை போஸ்ட் மாஸ்டர் கேட்டறிய உள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தலைமை போஸ்ட் மாஸ்டர், சென்னை பொது அஞ்சல் நிலையம், சென்னை 600001 என்ற முகவரிக்கு 13-12-23 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்ப வேண்டும்.
புகார் குறித்த தபால் அனுப்பும் பட்சத்தில், அந்த தபால் அனுப்பப்பட்ட தேதி, அனுப்பபட்ட நேரம், அனுப்பப்பட்டவரின் முழு முகவரி, தபாலை பெற்றவரின் முழு முகவரி, பதிவு தபாலின் ரசீது எண் மற்றும் தேதி , எம்ஓ, விபி, பதிவு தபால், காப்பீடு அல்லது விரைவு தபால் ஆகியவற்றை பதிவு செய்து அனுப்பிய அலுவலகம் ஆகியவை குறித்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
சேமிப்புதிட்டங்கள், தபால் லைஃப் இன்ஷூரன்ஸ் அல்லது ஊரக அஞ்சல் காப்பீடு ஆகியவை குறித்த புகார் எனில் கணக்கு வைத்திருப்பவரின் , காப்பீடு எடுத்தவரின் கணக்கு எண், பாலிசி எண், பெயர், முழு முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் மற்றும் தபால் துறையால் அளிக்கப்பட்ட குறிப்புகளை அளிக்க வேண்டும்.
இது போன்ற புகார்கள் ஏற்கனவே தபால் அலுவலகங்களில் கீழ் மட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டும், அது புகார் தாரருக்கு திருப்தி அளிக்காத பட்சத்தில் அந்தப் புகார்கள் அஞ்சல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும். நீதிமன்றத்தில் புதிய புகார்கள் எடுத்துக் கொள்ளப்படாது.
புகார்களை பதிவு தபால் அல்லது சாதாரண தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். குறைகள் குறித்து தனியார் கொரியர் மூலம் அனுப்பினால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. அனுப்பப்படும் புகாரின் கவரில் “DIVISION DAK ADALAT, CHENNAI GPO” என்று குறிப்பிடப்பட வேண்டும்.