தமிழகத்தில் சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதி – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-08-21 13:24 GMT

சினிமா திரையரங்கம் ( பைல் படம்)

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. இதனால் தொற்றும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகமானது.

திமுக அரசு பதவி ஏற்றவுடன் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பலனாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு 3 வது அலையை சமாளிக்க தயாராக இருப்பதாக கூறி அதற்குரிய அனைத்து அடிப்படை ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக தொடங்கியுள்ளது. தினமும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சினிமா ரசிகர்கள் மற்றும் பட தயாரிப்பு நிறுவனங்கள், திரை உலகினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

Similar News