கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் கழிவு நீர் குழாய் உடைப்பு: எம்எல்ஏ நேரில் ஆய்வு
கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் கழிவு நீர் குழாய் உடைந்து பள்ளி வளாகத்தில் தேங்கியதை எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 5வது பிரதான சாலையில் குடிநீர் மற்றும் கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது. நேற்றிரவு ஸ்டேஷனிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு 450 மில்லி மீட்டர் அளவு கொண்ட குழாய் வெடித்து சிதறியது.
இதில் பம்பிங் ஸ்டேஷன் அருகாமையில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்திற்குள் கழிவுநீர் குளம் போல் தேங்கியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் 35 -வது வார்டு கவுன்சிலர் ஜீவன் தண்டையார்பேட்டை மண்டல குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய பகுதி பொறியாளர் சகாதேவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த குழாயினை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர்.
மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. மேற்கண்ட இடத்தில் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் புதிய குழாய் மாற்றும் பணியை செய்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் இணைந்து சுத்தம் செய்து வருகின்றனர்.