கொடுங்கையூரில் இளைஞர்களை தாக்கி செல்போன் பறித்த ரவுடி கைது
கொடுங்கையூரில், விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் செல்போன் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.;
சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் 22 . இவர், நேற்று மாலை தனது நண்பர்களுடன் கண்ணதாசன் நகர் 5வது பிளாக் பகுதியில் உள்ள, சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர், வினோத் குமார் மற்றும் அவரது நண்பரான ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த அனில்குமார் 21 ஆகிய இருவரையும் அடித்து, அவரிடம் இருந்து 35000 ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். உடனே அருகில் விளையாடியவர்கள் இதுகுறித்து, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் ஓட்டேரி மேட்டுப்பாளையம் 2-வது தெருவைச் சேர்ந்த சாய்வீரா 24 என்ற நபரை கைது செய்தனர். மேலும் மற்றொரு நபரான மதன் என்கின்ற அறுப்பு மதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சாய் வீராவை கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். மற்றொரு ரவுடியான மதனை தேடி வருகின்றனர்.