வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீரில் சிக்கிய பேருந்து

சென்னை வியாசர்ப்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் இன்று காலை மாநகர பேருந்து சிக்கிக்கொண்டது.

Update: 2021-11-27 07:21 GMT

மீட்கப்பட்ட அரசு பேருந்து. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  கடந்த 3 நாட்களாக சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதியில் இருந்து, மூலக்கடை நோக்கிச் சென்ற 64K என்ற மாநகரப் பேருந்து, இன்று காலை வியாசர்பாடி பகுதியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்றது. அப்போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரின் காரணமாக பேருந்து செல்ல முடியாமல் , உள்ளேயே சிக்கிக் கொண்டது.

இதனை தொடர்ந்து. அப்பகுதிக்கு வந்த போக்குவரத்துப் போலீசார், மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருந்த பேருந்தை கட்டியிழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் இன்னலுக்குள்ளாகினர்.

வருடந்தோறும் மழைக் காலங்களில் கணேசபுரம் சுரங்கப் பாதையில் இதுபோன்ற மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டும் இப்பகுதி மக்கள், இதுபோன்ற பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News