வியாசர்பாடியில் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகன் நண்பருடன் கைது
சென்னை வியாசர்பாடியில் குடும்ப தகராறில் மாமியாரை குத்திக் கொலை செய்த மருமகனை நண்பருடன் போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் லதா (வயது 42 ).இவர் பெரியமேட்டில் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். லதாவிற்கு சுதா( 24.) மற்றும் 3 மகன்கள் உள்ளனர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு சுதாவை மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த பாலாஜி (26 )என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். பாலாஜி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே பாலாஜி - சுதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுதா பாலாஜியிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கே வந்துவிட்டார். இந்நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் பாலாஜி தனது நண்பரான பெரம்பூர் பகுதியை சேர்ந்த திவ்யநாத்( 31) என்பவருடன் சேர்ந்து வியாசர்பாடி அன்னை சத்யா நகர் 4வது தெருவில் உள்ள தனது மாமியார் வீடான லதா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சுதாவிடம் ஏன் என்னை விட்டு பிரிந்து வந்து விட்டாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார் அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுதாவின் கையில் வெட்டியுள்ளார். இதனை தடுக்க வந்த மாமியார் லதா வையும் சரமாரியாக குத்தி உள்ளார். இதற்கு பாலாஜியின் நண்பர் திவ்ய நாத் உடந்தையாக இருந்துள்ளார்.
இதில் லதாவிற்கு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. லதா மற்றும் சுதா ஆகிய இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சுதா கையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மாமியாரான லதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எம்.கே.பி .நகர் போலீசார் பாலாஜி மற்றும் அவரது நண்பர் திவ்யநாத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.