கீழே கிடந்த ரூ.10 ஆயிரம்: உரியவரிடம் தந்த பத்தரை மாற்றுத்தங்கங்கள்
பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில், கீழே கிடந்த ரூ.10 ஆயிரத்தை, உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிகளை பலரும் பாராட்டினர்.;
தவறவிட்ட ரூ.10, ஆயிரத்தை, உரியவரிடம் ஒப்படைத்த மாணவிகள்.
சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருபவர்கள் பவித்திரா, வாணி, சங்கரேஸ்வரி. இந்த மூன்று மாணவிகளும், பள்ளி முடிந்து வீனஸ் மார்க்கெட் வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கீழே ஒரு பிளாஸ்டிக்கவர் இருப்பதை கண்டு அதனை எடுத்து பார்த்துள்ளனர் அதில் பணம் இருந்துள்ளது உடனடியாக அதனை தங்களது பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் சுகந்தியிடம் காண்பித்துள்ளனர். அந்த கவரில் பத்தாயிரம் ரூபாய் இருந்துள்ளது.. அவரும், மாணவிகளும், அந்த பணத்தை, செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி அந்த பள்ளிக்குச் சென்று, பணத்தை நேர்மையாக ஒப்ப்டைத்த 3 மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியரை பாராட்டினார். அவர்களுக்கு சன்மானமாக 500 ரூபாய் பணம் கொடுத்து சிறப்பித்துள்ளார். பணத்தை தவறவிட்டவர்கள் செம்பியம் காவல் நிலையத்தில், உரிய ஆதாரங்களுடன் தெரிவித்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.