வியாசர்பாடியில் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு முகாம்

வியாசர்பாடியில் மாணவ மாணவிகளுக்கான பள்ளி தேர்வு திறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் போலீசாரால் நடத்தப்பட்டது

Update: 2022-02-27 06:31 GMT

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன்

சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் காவல் மாவட்டங்களில் புளியந்தோப்பு காவல் மாவட்டமும் ஒன்று இங்கு இளைஞர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் தவறான பழக்க வழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர்.  இதனை போக்க குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் காவல்துறையினர்  பல்வேறு வகையில் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் வியாசர்பாடி காவல் ஆய்வாளர் தீஷ் ஏற்பாட்டில் நம்பிக்கை சிகா சமூகநல அமைப்பு மற்றும் வியாசர்பாடி காவல் சிறார் மன்றம் இணைந்து இன்று பள்ளி தேர்வு திறனை மேம்படுத்துதல் மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாமை வியாசர்பாடி டான்பாஸ்கோ பள்ளியில் நடத்தினர்

இதில் சிறப்பு விருந்தினராக புளியந்தோப்பு மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரன்.  எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், சென்னை மாநகராட்சிப் பள்ளி முன்னாள் கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், எம்கேபி நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், மாணவர்கள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்து அதன்படி பயணிக்க வேண்டும். நம்முடைய லட்சியத்தை முதலிலேயே முடிவு செய்து அதற்காக அயராது பாடுபட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றியை பெறலாம்.

சிறுவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் வாட்ஸ்அப்  போன்ற இணையதளங்களில் அதிக நேரத்தை செலவிட கூடாது. குறிப்பாக செல்போன் விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது. மேலும் வாழ்க்கையில் குறிக்கோளோடு செயல்பட்டு வெற்றி பெற, ஒரு சிலரை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். பள்ளிப்பருவ கல்வி என்பது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அதனை தவற விட்டால் காலத்திற்கும் அது நமக்கு எட்டாக்கனியாக மாறி விடும்.

வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக முக்கியமானது. நம் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எனவே மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் கல்வியில் மட்டும் அதிக முக்கியத்துவம் செலுத்தி மற்றவற்றை தவிர்க்க வேண்டும், தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது என பேசினார்

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்வி ஆர்வலர்கள் பலரும், மாணவர்களின் தேர்வு திறனை மேம்படுத்தும் வகையிலும் கல்வி விழிப்புணர்வு சம்பந்தமாகவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள். புத்தகங்கள் வழங்கப்பட்டன..

Tags:    

Similar News