சென்னையில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் அதிக நேரம் செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-09 09:45 GMT

சென்னை கொடுங்கையூரில் தற்கொலை செய்த மாணவி தீபிகா.

சென்னை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(43). அரசு ஊழியரான இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அதில் மூத்த மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் தீபிகா(16) சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தீபிகா செல்போன் விளையாட்டில் அதிகநேரம் பொழுது போக்கி வந்ததாக தெரிகிறது. இதனை இவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபிகா இரவு உணவினை அருந்தாமல் படுக்கை அறைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து நேற்று காலை வழக்கம்போல் அவரது தாயார் தேனீர் கொடுக்க தீபிகாவின் அறை கதவை தட்டியபோது வெகு நேரமாக தீபிகா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தாயார் தந்தை கிருஷ்ணகுமார் உடன் சேர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா இருந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் 108 ஆம்புலன்சை அழைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபிகாவின் உடலை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News