சென்னையில் கத்தியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
சென்னையில் கத்தியை வைத்து தன்னை அறுத்து கொள்ளப்போவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டிய ரவுடி சீனிவாசனிடம் பறிமுதல் செய்த கத்தி.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற லோடாங்கு சீனிவாசன்(22). இவர் மீது ஏற்கனவே புளியந்தோப்பு பேசன் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதிக குடிபோதையில் கையில் 2 கத்திகளை வைத்து தன்னை அறுத்து கொள்ள போவதாகவும், யாராவது நெருங்கி வந்தால் அவர்களை வெட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் புளியந்தோப்பு போலீசார் உடனடியாக வாசுகி நகர் பகுதிக்கு சென்றனர். அங்கு கத்தியுடன் இருந்த சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை கொடுத்து அவனை பத்திரமாக மீட்டனர். மேலும் அவனிடம் இருந்த 2 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புளியந்தோப்பு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.